பட்டா மாறுதல் செய்வது பற்றிய தகவல்கள்


சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துவிடுவதுடன் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

  சம்பந்தப்பட்ட சொத்து எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது என்பதை அறிந்து, அந்த பகுதி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்திலும் பட்டா மாற்றம் செய்வதற்கு விண்ணப்பங்கள் கிடைக்கின்றன [Download Form] இதனை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை குறிப்பிட வேண்டும்.

  விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார் அல்லது கணவர் பெயர், இருப்பிட முகவரி போன்ற விவரங்களை தெளிவாக எழுத வேண்டும். அத்துடன் பட்டா மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரங்களை கவனமாக நிரப்ப வேண்டும்.

  அந்த விவரங்களை பிழை இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். அதில் சர்வே எண் போன்ற இலக்கங்களை தவறு இல்லாமல் எழுத வேண்டும்.

  சொத்துக்குரிய சர்வே எண் உள்ளடக்கிய இடம் முழுவதும் வாங்கப்பட்டு இருக்கிறதா? சொத்தின் ஒரு பகுதி மட்டும் வாங்கப்பட்டு இருக்கிறதா? என்பதை குறிப்பிட்டு அது தொடர்பான சர்வே எண்ணை குறிப்பிட வேண்டும்.

  ஒரு பகுதியை மட்டும் வாங்குவதாக இருந்தால் உட்பிரிவு சர்வே எண்ணை சரியாக குறிப்பிட வேண்டும். அத்துடன் பட்டா மாறுதலுக்கு கட்டணம் செலுத்திய விவரங்களை இணைக்க வேண்டும்.

  சொத்து விண்ணப்பிப்பவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சொத்துவரி செலுத்திய ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைக்க வேண்டும்.

  சொத்தானது பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட், உயில் என ஏதாவது ஒரு ஆவணம் மூலம் கிடைத்திருக்கலாம். அது பற்றிய விவரத்தையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.