தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது.
1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் மதராசு மாநிலம் ஆனது.
ஆனால் 1948ஆம் ஆண்டுவரை புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
இதுவே இந்தியாவோடு சேர்ந்த கடைசி சில சமஸ்தானங்களுள் ஒன்றாகும். தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென்மேற்கு கருநாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன.
1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களுள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும், தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டன.
1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டன.
1969இல், மதராசு மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தென்பகுதியில், தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.
தமிழ்நாடு 1,30,058 ச.கி.மீ. (50,216 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது மற்றும் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகும்.
1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஓர் அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.